கோவை அருகே உள்ள சூலூர், வெள்ளலூரில் மதுக்கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் வட்டம், இருகூரை அடுத்த அத்தப்பகவுண்டன்புதூர் சாலையில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால், இருகூர், ராம் நகர், தீபம் நகர், ஆல்வின் நகர், லட்சுமி நகர், பவர்ஹவுஸ், குரும்பபாளையம், அத்தப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொது மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆணையர் சுந்தர்ராஜன், சிங்காநல்லூர் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 30 நாள்களுக்குள் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பாஜக, அ.தி.மு.க, அம்மா அணியினர், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
விவசாய நிலத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி சாலை மறியல்:
சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் புதிதாக மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையை அகற்றக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகவினர் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகத் உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.