கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரியிலும், இணையதளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள 1,358 இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கியது. 7,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், மே 12-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரியில் பெறப்பட்டன.
முதல் நாளில் மட்டும் 1,624 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இறுதி நாளான மே 22-ஆம் தேதி வரை 7,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பட்டியலை கல்லூரியின் இணையதளத்திலும், அறிவிப்புப் பலகையிலும் வியாழக்கிழமை காலை முதல் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய படிப்புகளுக்குத் தனித் தனியாகவும், இதரப் படிப்புகளுக்குத் தனியாகவும் என 3 தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல் தொடர்பாக கடிதம் மூலமாக அறிவித்தல் எதுவும் இருக்காது என்பதால் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாகவோ அல்லுது கல்லூரிக்கு நேரில் சென்றோ தங்களது தரவரிசையை அறிந்து கொள்ளலாம்.
மே 29-ஆம் தேதி முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, மே 30-ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. மே 22-ஆம் தேதிக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட விண்ணப்பங்கள், இறுதிக் கட்டக் கலந்தாய்வின்போது பரிசீலிக்கப்படும் என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.