Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னைக்காக சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னைக்காக சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 01st April 2017 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கோவை மாவட்டத்தில் அதிக அளவு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், குடிநீர் பற்றாக்குறை என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவில் அந்தந்தப் பகுதிகளில் அலுவலர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்குவதன் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.
    பொதுமக்கள் தங்களது குடிநீர்த் தேவை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்க வசதியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 18005996000 பொருத்தப்பட்டுள்ளது.
    இதன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும்போது உடனடியாக அலுவலர்களைக் கொண்டு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சிலர் பொதுமக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி சாலை மறியல் போன்ற வன்முறைச் செயல்களைத் தூண்டி வருகின்றனர்.
    எனவே, இதுபோன்ற செயல்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம். தங்கள் பகுதிக்குத் தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்றால் தங்கள் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தோ அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவித்தாலோ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    மாறாக, யாரேனும் சாலை மறியல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai