Enable Javscript for better performance
கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவருக்கு கால் முறிவு- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய இருவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது பாலத்தில் இருந்து விழுந்து வியாழக்கிழமை கால் முறிவு ஏற்பட்டது.   
    கோவை, கணபதி, காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஹக்கீம் (27). இவரை, கடந்த செப்டம்பர் மாதம் கணபதி, மூர்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிகிறது.  இந்த வழக்கில் தொடர்புடையதாக 10-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
    இந்த வழக்கில் சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஹக்கீமின் நண்பரான கர்ணன் கணபதி அருகே நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார் (17), சூர்யா (19), ஹரிஹரன் (20) மற்றும் இவர்களது நண்பர்களான ஆனந்த், ஹரிபிரசாத், சின்னதுரை, முருகன் ஆகியோர் பார்த்துள்ளனர்.
    அப்போது, அவர்கள் கர்ணனைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில், தப்பியோடிய கர்ணன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஆனந்த் (20), ஹரிபிரசாத் (22) ஆகியோர் ரத்தினபுரி அருகே பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
    அதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது தப்பியோடிய ஆனந்த், ஹரிபிரசாத் ஆகியோர் ரத்தினபுரி மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் காவல் துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக நகைப் பறிப்பு, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்களைக் காவல் துறையினர் பிடிக்க முயற்சிக்கும்போது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்படும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது.
     இதில், தற்போது கால் முறிவு ஏற்பட்ட இருவரையும் சேர்த்து இதுவரை 8 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கைது செய்யப்பட்டவரின் தாய் தற்கொலை முயற்சி: இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தின் தாய் கன்னியம்மாள் தனது மகனைப் பார்க்க காவல் துறையினர் அனுமதிக்கவில்லை எனக் கூறி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறு. மேலும், காவல் துறையினர் தனது மகனை ஜாதியின் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் தலைமை நீதிபதி, ஆளுநர் ஆகியோருக்கும் அவர் புகார் மனு அனுப்பியுள்ளாராம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai