Enable Javscript for better performance
கோவையில் நள்ளிரவு வரை வாகனங்கள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் வியாழக்கிழமை நள்ளிரவு வரை கார், இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின.
    புகை மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான வாகன என்ஜின்களைத் தயாரிக்கும் வகையில், பாரத் ஸ்டேஜ் எனப்படும் பி.எஸ்.4 விதிகள் வகுக்கப்பட்டன. இதன்படி, பி.எஸ்.3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னர் விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பி.எஸ்.3 வாகனங்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த வகை வாகனங்களின் விலையைத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்தன. இதனால், கோவையில் பி.எஸ்.3 விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட என்ஜின்களை கொண்ட இருசக்கர வாகனங்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக நிறுவனங்கள் வியாழக்கிழமை அறிவித்தன.
    விலை குறைவு என்பதால் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின. நள்ளிரவு வரையிலும் விற்பனை நிலையங்களைத் திறந்து வைத்திருந்த விநியோகஸ்தர்கள், தங்களிடம் உள்ள வாகனங்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர்.
    அதிகம் விற்பனையாகக் கூடிய வகை வாகனங்கள் வியாழக்கிழமையே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், எஞ்சியுள்ள வாகனங்களை விற்பதில் விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டினர். விலை குறைப்பு குறித்து மக்களிடம்  விளம்பரப்படுத்தும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டனர்.
    கோவையில், ஹோண்டா, டி.வி.எஸ்., பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி விலையில் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.  அதேபோல, இண்டிகா கார்கள் ரூ. 1 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
    மாநகரில் வியாழக்கிழமை
    500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை அதைவிடக் கூடுதலாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது.
    இதேபோல, கோவையில் உள்ள மத்திய, தெற்கு, வடக்கு, மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தினமும் சராசரியாக 70 வாகனங்கள் வரை பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த இரு நாள்களில் மட்டும் வாகனப் பதிவு இருமடங்காக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விவரங்களை மார்ச் 31-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ள முடியும். இதனால், நாடு முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்கள் வாகனப் பதிவுக்கான பணிகளில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் முயற்சி செய்ததால் ஹோண்டா, டி.வி.எஸ்., பஜாஜ் நிறுவனங்களின் மோட்டார் வாகனப் பதிவுக்கான அரசின் இணையதளங்கள் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இதற்கிடையே, மாநகரில் புதிதாக வாகனங்களை வாங்கியவர்கள் பூஜை செய்வதற்காக கோயில்களில் குவிந்தனர். புலியகுளம் விநாயகர் கோயிலில் ஏராளமான வாகன உரிமையாளர்கள் குவிந்ததால், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai