Enable Javscript for better performance
தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற 15 நாள்கள் கெடு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற 15 நாள்கள் கெடு

    By DIN  |   Published on : 01st April 2017 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
     கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
     இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
     அரசுத் துறைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஆற்றுப் படுகைகள், வாய்க்கால்கள், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான குளம், குட்டைகள் ஆகியவற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுடன், குளத்தை அழகுபடுத்தி, கரைகளை பலப்படுத்தி கூடுதலாக மழைநீரைச் சேகரிக்க வேண்டும்.
     மேலும், கரைகளில் மரங்கள் நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, தனியார் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்பி 15 நாள்களுக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
     இதில், மரங்களை அகற்றத் தவறும்பட்சத்தில் அரசுத் துறை மூலமாக அவற்றை அகற்றி, அதற்கான செலவினத் தொகையை இரண்டு மடங்காக வசூலிக்க சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களைப் பொதுப் பணித் துறையினரும், கோயில் நிலங்களில் உள்ள மரங்களை இந்து சமய அறநிலையத் துறையினரும், நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரும் அகற்ற வேண்டும் என்றார்.
     இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பெ.கருப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai