Enable Javscript for better performance
தனியார் வசம் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணி: சாலைப் பணியாளர்கள் ஏப்ரல் 6-இல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் வசம் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணி: சாலைப் பணியாளர்கள் ஏப்ரல் 6-இல் போராட்டம்

    By DIN  |   Published on : 01st April 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியார் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து ஏப்ரல் 6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அம்சராஜ் தெரிவித்துள்ளார்.
     கோவை, தாமஸ் கிளப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
     தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணியை தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் நிறுவனத்துக்கு அளித்து வருகிறது. 5 ஆண்டுக்கும் ஒரே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
     இதில், தற்போது, திருவள்ளூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி போன்ற கோட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் பராமரிப்புப் பணிக்காக ரூ. 1,300 கோடி மதிப்பில் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இடுபொருள்கள், சாலைப் பணியாளர்களுக்கான ஊதியம் என 5 ஆண்டுகள் கணக்கிட்டால் ரூ. 300 கோடி மட்டுமே செலவு ஆகும்.
     ஆனால், தனியார் நிறுவனம் ரூ. 1,000 கோடி லாபம் சம்பாதிக்கும் வகையில் அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. எனவே, அடிப்படை விதியை மீறி சாலைப் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
     மேலும், பணி நீக்கக் காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்குப் பணி வழங்க வேண்டும்.
     சாலைப் பணியாளர்களின் பதவி உயர்வுக்கு எதிரான அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 6-ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கு ஊதி, சாவு மணி அடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.  மேலும், ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai