Enable Javscript for better performance
லாரிகள் வேலை நிறுத்தம்: பொருள்கள் தேக்கம்- Dinamani

சுடச்சுட

    

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     சரக்கு வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வாட் வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிமம் வாங்கக் கட்டணம் உயர்வு போன்றவற்றைக் கண்டித்தும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் லாரிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தென் மாநில லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
     அதன்படி, கோவையில் லாரிகள் வேலை நிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. கோவை மாநகரில் மட்டும் 4,500 லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.
     தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோவை, செஞ்சிலுவைச் சங்கம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உக்கடம் லாரி பேட்டை பகுதியிலும், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், புக்கிங் ஏஜென்ட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     லாரிகள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், கோவையில் பொருள்கள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் காய்கறிகள் அனுப்பப்படுவது வழக்கம். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, தக்காளி, காய்கறிகள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. எனவே, லாரிகளுக்குப் பதிலாக ஆட்டோக்களில் சரக்குகளை ஏற்றி அனுப்புவதில் வியாபாரிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
     கோவை வழியாக கேரள மாநிலத்துக்கு முட்டை, கோழி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் செல்வதும் தடைபட்டுள்ளது. மேலும், கோவையில் உற்பத்தியாகும் ஜவுளி, பெட்ஷீட், பனியன் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள், இயந்திரங்கள், உதிரி பாகங்கள், பம்ப் செட்கள் போன்றவையும் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.
     கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கும், கோவை வழியாக பிற மாநிலங்களுக்கும் செல்லக் கூடிய தேங்காய், பாக்கு, டீ, கயிறு, மீன், துறைமுகங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், உரம் போன்றவையும் தேக்கமடையத் தொடங்கியுள்ளன.  இருப்பினும், அத்தியாவசியப் பொருள்களான பால், குடிநீர், மருந்துகள், எரிவாயு உருளைகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை எடுத்துச் செல்ல லாரி உரிமையாளர் சங்கம் அனுமதித்துள்ளதால், இந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
     வேலை நிறுத்தம் மேலும் தீவிரமடையும் பட்சத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயரக் கூடும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    தீர்வு காண சீமா வலியுறுத்தல்:  இதுகுறித்து, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) சார்பில் அதன் தலைவர் கே.கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
     பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்ப் செட்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், லாரிகள் வேலை நிறுத்தம் எதிர்பாராததாகும்.
     இதனால் கோவையில் இயங்கி வரும் பம்ப் செட் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதும், உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பம்ப் செட்களை விற்பனைக்கு அனுப்புவதும் தடைபட்டுள்ளது.
     எனவே, லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai