Enable Javscript for better performance
புதிய இடங்களில் மதுக் கடைகள் அமைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்புநாகூரில் புதிதாக மதுக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாழைக்கொம்புநாகூர் பகுதியில் புதிதாக மதுக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வாழைக்கொம்புநாகூர் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மது பாட்டில்களை குழி தோண்டி புதைத்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    கீரணத்தத்தில்...: அன்னூரை அடுத்த எஸ்.ஸ்.குளம் ஒன்றியம், கீரணத்தம் பகுதியில் புதிதாக மதுக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
    பூந்தோட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கிவந்த மதுக் கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவுடன் மூடப்பட்டன. இந்தக் கடைகளை சரவணம்பட்டி-கீரணத்தம் சாலையில் அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
    சரவணம்பட்டி-கீரணத்தம் செல்லும் சாலையில் பள்ளிகள், கல்லூரிகள் பெருமளவில் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியில் மதுக் கடை அமைத்தால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவர். மேலும், கீரணத்தம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் இங்கு மதுக் கடைகள் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பகுதியில் மதுக் கடை அமைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றனர்.
    வால்பாறையில்...: வால்பாறை நகர் பகுதியில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்ட நிலையில், போலீஸார் பாதுகாப்புடன் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
    வால்பாறை வட்டத்தில் மொத்தம் 8 மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. அதில், கடந்த ஆண்டு இரண்டு கடையும், கடந்த மாதம் ஒரு கடையும் மூடப்பட்டன.
    இந்நிலையில், தற்போது வால்பாறை நகரில் இயங்கி வந்த 4 கடைகளும், சோலையாறு அணைப் பகுதியில் மூடப்பட்டுள்ளன. ஆனாலும், வால்பாறை பகுதியில் இருந்த மதுக் கடைகளுடன் கூடிய மதுக் கூடங்களில் போலீஸார் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai