வெள்ளலூர் பகுதி நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல: ஆய்வில் தகவல்
By DIN | Published on : 03rd April 2017 07:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை, வெள்ளலூர் பகுதி நிலத்தடி நீர் பயன்படுத்த உகந்தது அல்ல என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், 2003-ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 650 ஏக்கர் பரப்பிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு, குப்பை கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், புகைமூட்டம், கொசு, ஈக்களால் நோய்கள் பரவுவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுமார் 50 ஆயிரம் பொதுமக்களுக்குப் பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும் குப்பைக் கிடங்கை மூட வலியுறுத்தியும், கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடக் கோரியும், மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், சென்னை மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட மகாலிங்கபுரம், கஞ்சிகோணாம்பாளையம், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகளில் இருந்து நீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அங்குள்ள நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேட்டுப் பெற்றுள்ள மனுதாரர் வே.ஈஸ்வரன், இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை செய்தது. இதன் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், கிடங்கைச் சுற்றியுள்ள மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம் பகுதிகளில் சுமார் 8 இடங்களில், நிலத்தடி நீரின் டி.டி.எஸ். (நீரில் கரைந்துள்ள உப்பின் அளவு) அனுமதிக்கப்பட்ட அளவான 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மேலும், 6 இடங்களில் குளோரைடு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கடைசியாக 4 முறை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதை நிரூபிப்பதாகவே உள்ளன. இதேபோல், 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரிகளைச் சோதனை செய்ததில், 5-இல் 2 இடங்களில் அதிகமான காற்று மாசு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மேற்கொண்டு நிலத்தடி
நீர், காற்று மாசு ஏற்படாமல் தடுக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.