Enable Javscript for better performance
இளைஞர் மீது பொய் வழக்குப் பதிவு: கணபதி பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

  

  இளைஞர் மீது பொய் வழக்குப் பதிவு: கணபதி பொதுமக்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 04th April 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விசாரணை என்ற பெயரில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, அவரது காலை உடைத்துவிட்டதாகக் கூறி, கணபதி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கோவை, கணபதி எல்.ஜி.பி. சாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர், மாவட்ட ஆட்சியரின் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு வந்தனர். அவர்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, திடீரென ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
  இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் சகோதரி அனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கனூர் சாலையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக எனது சகோதரர் அரவிந்த்சாமி (24) என்பவரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எனது மற்றொரு சகோதரர் ஆனந்தகுமாரை கடந்த 28-ஆம் தேதி வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற போலீஸார், அவர் மீதும் பொய் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
  மேலும், அவரது காலை உடைத்த போலீஸார், அவர் தப்பியோடும்போது தவறி விழுந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
  இது குறித்து காவல் நிலையத்துக்குச் சென்று கேட்ட எனது தாயார் கன்னியம்மாளை போலீஸார் தகாத வார்த்தைகளால் பேசினர்.
  மேலும், எங்கள் இருவர் மீதும் விபசார வழக்குப் பதிவு செய்வோம் என்றும் மிரட்டினர். இதனால் பயந்துபோன எனது தாயார், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று, தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, பொய் வழக்கு தொடர்ந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
  பட்டா கோரி குடியேறும் போராட்டம்... கவுண்டம்பாளையம் பேரூராட்சி தெற்குபாளையம், ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பாத்திர பண்டங்களுடன்  குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இது குறித்து அவர்கள் கூறியதாவது:
  கடந்த 30 ஆண்டுகளாக ஓடைப் புறம்போக்கு நிலத்தில் 22 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்குப் பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என்று பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தற்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, வருவாய்த் துறை அதிகாரிகள் எங்களை இடம் மாற்றம் செய்ய முயற்சித்து  வருகின்றனர். எங்களுக்கு உடனடியாக அதே இடத்திலேயே வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
  விவசாயிகளுக்கு ஆதரவாக... தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் மூர்த்தி, துணைச் செயலர் சக்திவேல் உள்ளிட்டோர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி வந்து மனு அளித்தனர்.
  அடிப்படை வசதி... கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், செளரிபாளையம் ஆகிய பகுதிகளில் சாலை, சாக்கடை உள்ளிட்ட பொதுப் பிரச்னைகள் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக சரி செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் அதன் மாநகர் மாவட்டச் செயலர் என்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
  குடிநீர் வசதி கோரி...கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தங்களது பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும்,  இதனால் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாகவும், ஒரு குடம் நீருக்கு ரூ.10 வரை செலவு செய்வதாகவும் கூறியுள்ளனர். எனவே, குடிநீர் இலவசமாக
  கிடைப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
  மூடப்படாத மதுக்கடைகள்... கோவையில், உச்ச நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
  கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஆ.தங்கவேல்பாண்டியன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவையில் ரயில் நிலையம், பேரூர் சாலை, அவிநாசி சாலை, 100 அடி சாலை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகளில் மதுக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai