Enable Javscript for better performance
சர்தார் வல்லபபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சர்தார் வல்லபபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்

    By DIN  |   Published on : 04th April 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கோவை சர்தார் வல்லபபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன மாணவ, மாணவிகள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டத்தைத் திங்கள்கிழமை தொடர்ந்தனர்.
     அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், கல்லூரி முதல்வரைப் பணி நீக்கம் செய்யக் கோரியும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கல்வி நிறுவன முதல்வர், இயக்குநர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
     இதையடுத்து, மாணவர்கள் தினமும் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி  வளாகத்தில் அமர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தில்லியில் இருந்து இக்கல்லூரிக்கு வந்த மத்திய ஜவுளித் துறை இயக்குநர் சுசில் கெய்க்வாட், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் திங்கள்கிழமை ஈடுபட்டார்.
     தகுதியான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை ஜவுளித் துறை அமைச்சகம் விரைவில் செய்து கொடுக்கும் என்றும், கல்லூரி முதல்வர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்த கெய்க்வாட், மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
     ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகவே இதேபோன்று பலரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துவிட்டுச் செல்வதாகவும், அதன் பிறகு எந்தவித மேல்நடவடிக்கையும் எடுப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டிய மாணவர்கள், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் நேரடியாக வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட முடியும் என்று கூறிவிட்டனர்.
     இதைத் தொடர்ந்து, கல்லூரியில் தங்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, மாணவர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai