Enable Javscript for better performance
வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: காலவரையற்ற விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: காலவரையற்ற விடுமுறை

    By DIN  |   Published on : 04th April 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
     கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
     விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த வாரத்தில் ரேஸ்கோர்ஸ், கோனியம்மன் கோயில், அரசு சட்டக் கல்லூரி பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
     இந்நிலையில், கோவை, வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியின் 4-ஆவது நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னாவில் ஈடுபட்டனர். இதில், அங்கு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
      தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காவிட்டால், எங்களின் போராட்டம் காலவரையின்றி தொடரும் என்று வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    காலவரையற்ற விடுமுறை... பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கியுள்ள போராட்டம் தொடரக்கூடும் என்பதால், பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
     மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் 3-ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் நிலையில், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் விடுதியில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
      முன்னதாக, விடுமுறை அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் சார்பில் துணைவேந்தர் ராமசாமியை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவான தங்களது போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai