Enable Javscript for better performance
தமிழக-கேரள எல்லையில்தடுத்து நிறுத்தப்பட்ட லாரிகள்- Dinamani

சுடச்சுட

    

    லாரிகள் வேலை நிறுத்தம் 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்காமல் இயங்கி வந்த லாரிகள், தமிழக-கேரள எல்லையான வாளையாறு பகுதியில் லாரி உரிமையாளர் சங்கத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
    காப்பீட்டுத் தொகை உயர்வு, வாட் வரி உயர்வு போன்றவற்றைக் கண்டிப்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்தப் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் சுமார் 4,500 லாரிகளும், மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளும் இயங்கவில்லை. இதனால், கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. அதேபோல், கோவைக்கு வர வேண்டிய உற்பத்திப் பொருள்களுக்கான மூலப் பொருள்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதாகவும், இதனால் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாகவும் திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின. இருந்தாலும், காப்பீட்டுத் தொகை உயர்வு தொடர்பாக நடைபெற்ற போராட்டம் தோல்வி அடைந்ததால், போராட்டத்தைத் தொடருவதாக தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
    இதற்கிடையே, கடந்த சில நாள்களாக தென் மாநிலங்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான லாரிகள் போராட்டத்தில் பங்கேற்காமல் வாளையாறு வழியாக கேரளத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகின.
    இதையடுத்து, கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வாளையாறு சோதனைச் சாவடி பகுதிக்குச் சென்று, தங்களது போராட்டம் குறித்து உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் விளக்கி, ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
    இந்த முயற்சிக்குப் பலன் கிடைத்ததாகவும், தமிழக, கேரள லாரி உரிமையாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 நாள்களில் போராட்டத்தில் பங்கேற்காமல் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான லாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக நாள்தோறும் சுமார் ரூ. 150 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai