Enable Javscript for better performance
ரூ. 3.90 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் கடந்த ஆண்டு கேரள நகை வியாபாரியின் காரை கடத்தி ரூ. 3.90 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.
    கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் நகை வியாபாரி அன்வர் சதாத். இவரிடம் கேரளத்தைச் சேர்ந்த நா.ஆனந்த் (29), சிகாஷ் (23), முகமது (53), முஜீர் ஆகிய நான்கு பேர் வேலை செய்து வந்தனர்.
    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, சென்னையில் நகைகளை விற்பனை செய்து விட்டு நான்கு பேரும் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதுக்கரை எல்அன்டி புறவழிச் சாலையில் ஈச்சனாரி அருகே இவர்களது காரை, மற்றொரு வாகனத்தில் வந்த 5 பேர் வழிமறித்தனர்.
    பின்னர் அவர்களில் 3 பேர் தங்களைக் காவல் துறை அதிகாரிகள் எனக் கூறி, காரில் இருந்த ரூ. 3.90 கோடி பணத்தை காருடன் கடத்திச் சென்றனர்.
    இந்த வழக்கில் தொடர்புடையதாக க.பரமத்தி காவல் ஆய்வாளர் என்.முத்துகுமார், குளித்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.சரவணன், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் தர்மேந்திரன், கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர்.  
    இதனிடையே, இக்கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கோடாலி ஸ்ரீதரின் நண்பரான மலப்புரம் மாவட்டம், பரன்சேரியை அடுத்த வள்ளுவாம்பரத்தைச் சேர்ந்த எம்.ஹைதர் அலி (39) என்பவரை மதுக்கரை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர். இவர் காரில் பணம் வருவது குறித்த தகவலைத் தெரிவித்ததாகவும், கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai