Enable Javscript for better performance
பவானி ஆற்றில் இருந்து பாசனத்துக்காகவாரத்தில் 4 நாள்கள் தண்ணீர் எடுக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    பவானி ஆற்றில் இருந்து பாசனத்துக்காக வாரத்தில் 4 நாள்கள் தண்ணீர் எடுக்க அனுமதி

    By DIN  |   Published on : 06th April 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் பாசனத்துக்காக பவானி ஆற்றில் இருந்து வாரத்துக்கு நான்கு நாள்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மேட்டுப்பாளையம், சுற்றுவட்டாரப் பகுதி விவசாயத்துக்கு பவானி ஆறு முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி காரணமாக, தற்போது பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது.
    எனவே, பவானி ஆற்றில் தேவையான நீர்வரத்து இருக்க ஏதுவாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமுகை, ஆலாங்கொம்பு பகுதியில் ஆற்றிலிருந்து பாசனத்துக்குச் செல்லும் மின் மோட்டார் இணைப்புகளை வருவாய்த் துறையினர் துண்டித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பவானி ஆற்றுநீர் பாசன விவசாயிகள், ஆற்றிலிருந்து பாசனத்துக்கு நீர் எடுக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவரது உத்தரவின்பேரில்,  ஆற்றுநீர்ப் பாசன விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
    இதில், ஆற்றுநீரை நம்பி அதிக முதலீடு செய்து வாழைகளைப் பயிரிட்டுள்ளதால் மின் மோட்டார் இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும், வாரம் 5 நாள்கள் பாசனத்துக்கு ஆற்றில் இருந்து நீர் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பேசியதாவது:
    தற்போது மாவட்டம் முழுவதும் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் ஆதாரத்தை காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு 10 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதே சிக்கலாக இருப்பதால், விவசாயிகள் பாசனத்துக்கு எடுக்கும் நீரின் அளவைக் குறைத்து கொள்ளும் வகையில் வாரத்துக்கு 4 நாள்கள் மட்டும் ஆற்றிலிருந்து நீர் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. பருவமழை ஆரம்பமாகும் வரை மின் மோட்டார் மூலம் நீர் எடுத்து புதிய நடவுப் பணிகள் தொடங்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai