Enable Javscript for better performance
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 06th April 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்று வழிகாட்டும் நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 6, 7-ஆம் தேதிகளில் நடத்துகிறது.
    இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஏதுவாக மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் குறித்த ஒரு நாள் வழிகாட்டி கருத்தரங்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
    இந்தக் கருத்தரங்கில், மருத்துவம், பொறியியல், வங்கி, நீதித் துறை, கணக்குத் தணிக்கை, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள், முப்படை அதிகாரிகள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.
    இந்தக் கருத்தரங்கு மாவட்டத் தலைநகரம், நகராட்சிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஒன்றியங்களில் 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதன்படி, இன்று அரசூர் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியிலும், பொள்ளாச்சி புளியம்பட்டி பி.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியிலும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
    இதில், கோவை மாநகரம், சூலூர், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி நகராட்சி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 125 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
    அதேபோல், வெள்ளிக்கிழமை கிணத்துக்கடவு அக்சயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, மதுக்கரை ரத்தினம் பொறியியல் கல்லூரி, நரசீபுரம் கலைமகள் பொறியியல் கல்லூரி, அன்னூர் கரியாம்பாளையம் சசூரி அகாதெமி பொறியியல் கல்லூரி, வால்பாறை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆனைமலை ஸ்ரீ ராமு கலை, அறிவியல் கல்லூரி, காரமடை ஆர்.வி.கலைக் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதர் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
    இந்தக் கருத்தரங்குகளில் மொத்தம் சுமார் 28 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai