Enable Javscript for better performance
மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு: பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு: பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 06th April 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி, சூலூர், அன்னூர் பகுதிகளில் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
      பொள்ளாச்சி அருகே ஊத்துக்காடு சாலை பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மதுக்கடை அமைய உள்ள கட்டடத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     இதேபோல், பொள்ளாச்சியை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். போலீஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.
    ராமபட்டினம் பிரிவு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டதுடன் பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், டாஸ்மாக் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
    சூலூர் வட்டத்தில்...: சூலூர் வட்டம், சோமனூரை அடுத்து உள்ள ராமாச்சிபாளையத்தில் புதிதாக மதுக்கடை அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சேகரன், பொள்ளாச்சி டாஸ்மாக் மண்டல மேலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடைகளை அமைக்கும் உத்தேசம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அன்னூரில்... : அன்னூர்-அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றி அல்லிக்குளம் பகுதியில் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வட்டாட்சியர் இருதயராஜ், பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    அன்னூர்-சோமனூர் சாலையில், சொக்கம்பாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் மதுக்கடையை காக்காபாளையம் நால்ரோட்டில் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன்,
    டாஸ்மாக் மண்டல மேலாளர் ஜெயசந்திரன் பிரபாகரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், 2 மாதத்தில் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai