Enable Javscript for better performance
அவினாசிலிங்கம் பல்கலை.க்கு 12-பி அந்தஸ்து: வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    அவினாசிலிங்கம் பல்கலை.க்கு 12-பி அந்தஸ்து: வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தகவல்

    By DIN  |   Published on : 07th April 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு 12-பி அந்தஸ்து கிடைத்திருப்பதாக அதன் வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் கல்லூரியானது சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வியாளருமான தி.ச.அவினாசிலிங்கத்தால் 1957-இல் 45 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. கடந்த 1988 ஜூன் மாதத்தில் அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் கல்லூரி, அவினாசிலிங்கம் ஆசிரியர் கல்லூரி ஆகியவை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டன.
    இந்த இரு கல்லூரிகளும் அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர் கல்வி நிறுவனமாக (நிகர்நிலை பல்கலைக்கழகம்) உயர்ந்து, கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தேசிய தர மறுமதிப்பீடு செய்யப்பட்டு ஏ தகுதியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழும் ஏ பிரிவில் அமைந்துள்ளது.
     நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்ற கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியக் குழுவின் கோட்பாடுகளின்படி இயங்க வேண்டும். இதை ஆய்வு செய்ய மானியக் குழுவால் நிர்ணயிக்கப்படும் உயர்நிலைக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி நிறுவனத்தை ஆய்வு செய்யும்.
    அதன்படி, கடந்த ஜனவரி மாதம் இந்த கல்வி நிறுவனத்தை ஆய்வு செய்த 8 பேர் அடங்கிய நிபுணர் குழுவினர், பல்கலைக்கழக ஆட்சி முறை, உள்கட்டமைப்பு, நிதி, மாணவர் செயல்பாடு, கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
    இதையடுத்து, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிகர்நிலை பல்கலைக்கழக தகுதி அடுத்த 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய தர மறுமதிப்பீடு, மனிதவள மேம்பாட்டுத் துறையின் தர வரிசைகளில் ஏ பிரிவில் உள்ள இந்தக் கல்வி நிறுவனத்துக்கு, 12-பி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த டிசம்பர் 2016-இல் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நிறுவனத்துக்கு 12-பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய நிதியளிப்பு முகமைகள் மூலம் பெறுகின்ற திட்ட ஆய்வுகளுக்கான நிதி உதவிகள், தேசிய, பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து நிகழ்வுகள் நடத்த அனுமதி, நூலகத்துக்கான இலவச சந்தாக்கள் போன்றவை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பதிவாளர் கெளசல்யா ஆகியோர் உடனிருந்தனர். 1972-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் 12-பி அந்தஸ்து பெற வேண்டாம் என்ற விதிகள் இருந்து வந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் 12-பி அந்தஸ்து அவசியம் தேவை என்று அந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன.
    12-பி அந்தஸ்து இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் வழங்கப்படும் கல்விக்கான பல்வேறு உதவித் தொகைகள், ஆராய்ச்சிப் பணிக்கான நிதியுதவிகள் கிடைக்காது என்பதால், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு 12-பி அந்தஸ்து பெற வேண்டும். சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2015-இல் ஆசிரியர்கள், மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai