Enable Javscript for better performance
காசி யாத்திரைக்கு அழைத்து செல்வதாக ரூ. 80 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    காசி யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 2 ஆயிரம் பேரிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
    இதுகுறித்து சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த மனோண்மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்த புகார் மனு:
    காசி புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) வாயிலாக 2016-இல் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனை நம்பி குறிப்பிட்ட எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, ஜோசப் (என்கிற) சிவருத்ரன் என்பவர் நேரில் வந்து யாத்திரைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுச் சென்றார். பின்னர், 18 நாள்கள் யாத்திரையாக காசிக்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டுக்கான யாத்திரை பணி தொடங்கப்பட்டது. இதற்காக 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாத்திரைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.
    இதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மூலமாக யாத்திரைக்கான வசூல் புத்தகம் அனுப்பப்பட்டு பலரிடம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் வசூலிக்கப்பட்டது.
    இந்நிலையில், வசூலிக்கப்பட்ட பணத்துடன் ஜோசப் தலைமறைவாகி விட்டார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ. 80 லட்சத்தை திரும்பப் பெற்றுத் தர நடவடிக்கை வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai