Enable Javscript for better performance
கோவையில் முதல் கட்டமாக 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் முதல் கட்டமாக 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி துவக்கம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை வடக்கு, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 297 ரேஷன் கடைகள் மூலமாக முதல் கட்டமாக 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,412 ரேஷன் கடைகளில் மொத்தம் 10.39 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில், போலி, முறையாகப் பயன்படுத்தாத காரணத்தால் நீக்கப்பட்ட, தாற்காலிகமாக நீக்கப்பட்ட குடும்ப அட்டைகள் போக தற்போது 9.55 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    போலி குடும்ப அட்டைகளைத் தவிர்க்கவும், அத்தியாவசியப் பொருள்களை முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அட்டையுடன் செல்லிடப்பேசி, ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு வந்தது.
    இதில், கோவை மாவட்டத்தில் 90 சதவீத குடும்ப அட்டைதார்களின் செல்லிடப்பேசி எண் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாங்கியப் பொருள்களுக்கு ரசீது வழங்கப்பட்டும், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசிக்கு எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்தி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
    முதல்கட்டமாக 50 ஆயிரம் கார்டுகள்:
    கோவை மாவட்டத்தில் உதவிப் பங்கீட்டு அலுவலகம் 1,2,3, கோவை வடக்கு, தெற்கு, பொள்ளாச்சி, அன்னூர், சூலூர், வால்பாறை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் என 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    இதில், கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 145 ரேஷன் கடைகளிலும், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 152 ரேஷன் கடைகளிலும் முதல் கட்டமாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    இதற்காக 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வரவழைக்கப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் அவுட்சோர்ஸ் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ.ஆர். ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசி எண், குடும்பத்தாரின் பெயர்கள் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்டதற்காக ரகசிய குறியீட்டு எண் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக கிடைக்கப் பெறும். அதனைக் கொண்டு ஸ்மார்ட் கார்டு செயல்படுத்த முடியும்.
    ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும்போது முறைகேடாக ரசீது போட்டு பொருள்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    அதன்படி முதல் முறையாக முறைகேட்டில் ஈடுபடும் ஊழியருக்கு ஒரு கிலோ அரிசி, கோதுமைக்கு ரூ. 25-ம், சர்க்கரைக்கும் ரூ. 50-ம், எண்ணெய், பருப்பு-க்கு ரூ. 75 அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறைக்கு 5 மடங்காகவும், மூன்றாவது முறைக்கு 10 மடங்காகவும் அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
    மேலும் நான்கு முறையாக முறைகேட்டில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 ஊழியர்கள் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai