Enable Javscript for better performance
மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடை அமைக்க எதிர்ப்பு: மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவையை அடுத்த துடியலூர்-கணுவாய் சாலை, கருணாநிதி நகர், சஞ்சீவி நகர் உள்ளது. இப்பகுதியில், துடியலூர், கே.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் அகற்றப்பட்ட மதுக் கடைகளை  அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கோவை ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர், ஆட்சியர் ஹரிஹரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    இருகூர்-ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழே மதுக் கடை அமைந்துள்ளது. குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இக்கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில் மற்றொரு பகுதியில் இருந்து காலி செய்யப்பட்ட மதுக் கடையை, இப்பகுதிலேயே அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கடைகளையும் காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருகூர் மக்கள் நலக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்ராஜ், பிரதீப்குமார் ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சியில் நெடுஞ்சாலை அருகே செயல்பட்டு வரும் இரண்டு மதுக் கூடங்களை முற்றுகையிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி நகரப் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடைகள் 13, 6 தனியார் மதுக் கூடங்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு மூடப்பட்டன. இந்நிலையில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே ராஜா மில் சாலை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே பொள்ளாச்சி-பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இரண்டு தனியார் மதுக் கூடங்களையும் மூடக் கோரி, அந்த மதுக் கூடங்களுக்கு முன்பு மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் இயங்கி வரும் மதுக் கடையையும், கோட்டூர்-மலையாண்டிபட்டினம் நெல்லித்துறை செல்லும் சாலை புதிதாக அமையவுள்ள மதுக் கடையையும் அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சின்னத்தடாகத்தில்...: சின்னத்தடாகத்தில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோவை வடக்கு வட்டாச்சியர் சிவகுமார், துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விரைவில் இரண்டு கடைகளும் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
    காக்காபாளையத்தில்...: அன்னூரை அடுத்த காக்காபாளையம் நான்கு சாலை சந்திப்பில் மதுக் கடை அமைக்கும் நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காக்காபாளையம், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai