Enable Javscript for better performance
முழு அடைப்பு: கோவையில் இருந்து கேரளத்துக்கு பேருந்து சேவை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    முழு அடைப்பு: கோவையில் இருந்து கேரளத்துக்கு பேருந்து சேவை நிறுத்தம்

    By DIN  |   Published on : 07th April 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து அந்த மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பாம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறி திருவனந்தபுரத்தில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை மாணவரின் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, காவல் துறையினர் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காவல் துறையினரைக் கண்டித்து காங்கிரஸ், பாஜக சார்பில் வியாழக்கிழமை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    இதனால், கேரளத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டிருந்தன. மேலும், பேருந்து சேவையும் முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    இப்போராட்டம் காரணமாக உக்கடத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசின் 25 பேருந்துகளும், கேரள அரசு சார்பில் இயக்கப்படும் 30 பேருந்துகளும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனால், உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள செல்லும் பேருந்துகள் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    தமிழக-கேரள எல்லையான வாளையாறு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளத்துக்குச் செல்லக் கூடிய சரக்கு லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் இயக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai