Enable Javscript for better performance
விஜயா வாசகர் வட்ட விருதுகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2017-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், நூலகர்களை ஊக்குவிக்கும்விதமாக ஜெயகாந்தன், கவிஞர் மீரா, சக்தி வை.கோவிந்தன் ஆகியோரது பெயரில் 2016-ஆம் ஆண்டு முதல் விருதுகள் விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், இளஞ்சேரல் ஆகியோருக்கும் நூலகர் பா.விஜயனுக்கும் விருது வழங்கப்பட்டது.
    இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த ஆண்டு புதுமைப்பித்தன் பெயரிலும் புதிதாக விருது வழங்கப்பட உள்ளது.
    அதன்படி, எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய ஜெயகாந்தன் விருது வழங்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட கவிஞர் மீரா விருது எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருக்கும், ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட புதுமைப்பித்தன் விருது எழுத்தாளர் என்.ஸ்ரீராமுக்கும், ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட சக்தி வை.கோவிந்தன் பெயரிலான நல்நூலகர் விருது கோத்தகிரி அரசு நூலக நூலகர் என்.பி.ரவிக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக புத்தகத் திருநாளான ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
    நீதிபதி ஆர்.மகாதேவன் இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி விருதுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற வண்ணதாசனுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற இருப்பதாக விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
    வண்ணநிலவன்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணநிலவனின் இயற்பெயர் உ.ராமச்சந்திரன். இவர், கண்ணதாசன், கணையாழி, துக்ளக் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியுள்ளார். கடல்புரத்தில், நெஞ்சம், நேசம் மறப்பதில்லை உள்ளிட்ட நாவல்களையும், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார்.
    எஸ்.செந்தில்குமார்: தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார், வெயில் உலர்த்திய வீடு, சித்திரப்புலி உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், ஜீ.செளந்தரராஜனின் கதை, முறிமருந்து உள்ளிட்ட 5 நாவல்களையும், கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
    என்.ஸ்ரீராம்: தாராபுரம் அருகேயுள்ள நல்லிமடத்தைச் சேர்ந்த என்.ஸ்ரீராம், வெளிவாங்கும் காலம், மாடவீடுகளின் தனிமை உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், அத்திமரச்சாலை என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
    என்.பி.ரவி: நீலகிரி மாவட்டம், தாந்தநாடு பகுதியைச் சேர்ந்த நூலகர் ரவி, இத்துறையில் 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். 14 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்தது உள்ளிட்ட சாதனைகளைப் புரிந்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai