குழியில் விழுந்து கிடந்த இளைஞர் சடலம் மீட்பு
By DIN | Published on : 08th April 2017 08:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
துடியலூர் அருகே உள்ள பெரிய தடாகத்தில் சாலையோரத்தில் இருந்த குழியில் விழுந்து கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே செரியாம்பட்டியைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மகன் தமிழரசு (27). இவர் கணுவாய் திருவள்ளுவர் நகரில் தங்கியிருந்து பெரிய தடாகத்தில் உள்ள அவரது உறவினரின் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செங்கல் சூளையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனைகட்டி நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது குழியில் தவறி விழுந்துவிட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை காலை அவ்வழியே சென்றவர்கள் இவரைப் பார்த்து துடியலூர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.