Enable Javscript for better performance
சீமைக் கருவேல மரங்களை அகற்றிய போக்குவரத்து போலீஸார்- Dinamani

சுடச்சுட

    

    கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 26-ஆம் தேதி நரசம்பதி குளக்கரையில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினர்.
    இந்நிலையில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர் ஈடுபட்டனர். கோவை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.சரவணன் தலைமையில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட காவலர்கள், கல்லூரி வளாகத்தில் திரண்டனர். அவர்கள், 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் உதவி ஆணையர்கள் மகுடபதி, கொடிச்செல்வன், ஆய்வாளர் அய்யர்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    அன்னூரில்... மேட்டுப்பாளையம் வட்ட சட்டப் பணிக் குழு, அன்னூர் பேரூராட்சி, இப்பகுதி இளைஞர்கள் சார்பில் அன்னூர் குளம், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    அன்னூர் குளம் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் நீதிபதியும், குற்றவியல் நீதித் துறை நடுவருமான கே.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் இருதயராஜ், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் பொங்கியண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை நீதிபதி சுரேஷ்குமார் தொடக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி.வில்சன், செயலாளர் ஆர்.சிவகுமார், துணை வட்டாட்சியர் விக்டர் ஆல்பர்ட் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் கே.செல்வராஜ், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai