Enable Javscript for better performance
திருட முயன்றவர் அடித்துக் கொலை: 6 மாணவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த வழியாம்பாளையத்தில் கடந்த 5-ஆம் தேதி காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    வழியாம்பாளையம், வையாபுரி நகரில் கடந்த 5-ஆம் தேதி காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடமிருந்த வாக்காளர் அடையாள அட்டையில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த புஷ்பாவின் மகன் மைக்கேல் லிபர்ட்டி (38) என்பது தெரியவந்தது.
    இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
    இந்நிலையில், இதுகுறித்து வையாபுரி நகரில் வசித்து வரும் தனியார் கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் கடந்த 5-ஆம் தேதி நுழைந்த மைக்கேல் லிபர்ட்டி, அங்கிருந்த மடிக்கணினி, செல்லிடப்பேசிகளைத் திருட முயன்றுள்ளார். இதையறிந்த மாணவர்கள் 6 பேர், பொதுமக்கள் மைக்கேல் லிபர்ட்டியைத் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மைக்கேல் லிபர்ட்டி உயிரிழந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, இக்கொலை தொடர்பாக தனியார் கல்லூரி மாணவர்களான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவராஜ் மகன் சபரி (20), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுபாலன் மகன் அந்தோணி (20), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புள்ளார்சாமி மகன் செந்தில்குமார் (20), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹைதர் அலி மகன் தமீமுன் அன்சாரி (20), அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் குணா (20), திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் மோகன் (21) ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai