Enable Javscript for better performance
நெல்லில் மருத்துவ குணங்கள்: ஆராய்ச்சி மேற்கொள்ள வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீ- Dinamani

சுடச்சுட

    

    நெல்லில் மருத்துவ குணங்கள்: ஆராய்ச்சி மேற்கொள்ள வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 09th April 2017 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லில் ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    ஊட்டச்சத்து குறைபாடு பெண்கள், குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவீத பெண்கள் ரத்தசோகையுடனும், 3 வயது வரையிலான குழந்தைகளில 45 சதவீதம் பேர் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர். இந்தக் குறைபாடுகளை தீர்க்கக்கூடிய சத்து மாத்திரைகள், சிறப்பு உணவுக்கான செலவு மிக அதிகம் என்பதால், கிராமப்புறம், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளின் உடல் நலனுக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.
    அதேநேரம், நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் கூறுகளை மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துகளை செறிவுபடுத்துவதன் மூலமாக பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
    இந்நிலையில், இந்திய அரசின் உயிர் தொழில்நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிக் குழுமம், குழந்தைகளின் உடல்நலம் காத்தல் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட், அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து, மருந்துகள், வேளாண் பொருள்களின் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க முடிவு செய்துள்ளது.
    இந்தத் திட்டத்தை இணைந்து செயல்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறுவியல், உயிர்த் தொழில்நுட்பவியல் மையம், மதுரை மனையியல் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவத் துறை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    இதற்காக, ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச் சத்து, துத்தநாக சத்துக்களின் உயிர் நிலைப்புத் தன்மை, சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படும் எனபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai