Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 09th April 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இளைஞர்கள், மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் புதுதில்லியில் கடந்த 26 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், ரேஸ்கோர்ஸ், கோனியம்மன் கோயில் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் திடீர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.
    இந்த நிலையில், காவல் துறையின் அனுமதியைப் பெற்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பல்வேறு இளைஞர் அமைப்புகள் முயன்று வந்த நிலையில், 'மாற்றம் ஆரம்பம்' என்ற பெயரிலான இளைஞர்கள் குழுவுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது.
    இதையடுத்து, டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகில் இளைஞர்கள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவிகள், இளம் பெண்கள், இளைஞர்கள் உள்பட சுமார் 150 பேர் பங்கேற்றனர். இதில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
    இப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகையில், 'கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் மீண்டும் இளைஞர்களும், மாணவர்களும் பெருந்திரளாக கூட வேண்டியது அவசியம்' என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai