Enable Javscript for better performance
4.5 கிலோ நகை கொள்ளை வழக்கு: மேலும் ஒன்றரை கிலோ நகை மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    4.5 கிலோ நகை கொள்ளை வழக்கு: மேலும் ஒன்றரை கிலோ நகை மீட்பு

    By DIN  |   Published on : 09th April 2017 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை நகைக் கடையில் கடந்த மாதம் 4.5 கிலோ நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒன்றரை கிலோ நகைகளை காவல் துறையினர் சனிக்கிழமை மீட்டனர்.
    கோவை, ராஜவீதியில் சந்திரசேகர் (47) என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது. இவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ரியாசுதீன் உள்பட மூன்று பேர் நகைக் கடைக்குள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி புகுந்து சுமார் 4.5 கிலோ நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
    இது தொடர்பாக, துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) எஸ்.லட்சுமி மேற்பார்வையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
    இதனிடையே, பெங்களூரில் இருந்து தமிழகம் நோக்கி கடந்த வியாழக்கிழமை வந்த கர்நாடக அரசுப் பேருந்தை ஆசனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். மூன்று நபர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 1.4 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ரியாசுதீன், அசாருதீன், விஜயகுமார் என்பதும், கோவை நகைக் கடையில் இந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.
    இதையடுத்து, மூவரையும் காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பிடிபட்ட மூவரும் 1.4 கிலோ நகைகளை மட்டுமே கொள்ளை அடித்துச் சென்றதாகத் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு தனித்தனியாக நடத்திய விசாரணையில், கோவை மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த 1.5 கிலோ நகைகளை சனிக்கிழமை மீட்டனர்.
    இதனிடையே, நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டு தலைமறைவாக இருந்தபோது கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களிலும் மீதம் உள்ள நகைகளை விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai