Enable Javscript for better performance
மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    
    mm1

    கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், பால் காவடி எடுத்து வந்தனர். மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை 9 மணி அளவில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். கோயிலைச் சுற்றி தங்கமயில் வாகன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணி அளவில் தங்க ரதப் புறப்பாடு நடைபெற்றது.
    இதில், கோவை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பால் குடம், பால் காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதையொட்டி, மருதமலைக்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
    வட்டமலை ஆண்டவர் கோயில் தேர்த் திருவிழா... அன்னூர் அருகே குமாரபாளையத்தில் உள்ள வட்டமலை ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    வட்டமலை ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காலை கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கியது. 5-ஆம் தேதி காலை 5 மணி அளவில் கணபதி பூஜையும், கொடியேற்றமும் நடைபெற்றன. தொடர்ந்து 6, 7-ஆம் தேதிகளில் யாகசாலை பூஜைகள், சுவாமி உள்பிரகாரப் புறப்பாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 8-ஆம் தேதி காலை யாக சாலை புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 9-ஆம் தேதி காலை 5 மணி அளவில் யாகசாலை பூஜையும், காலை 8 மணி அளவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்வும் நடைபெற்றன.
    அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தேருக்கு முன்னால் காவடி குழுவினரின் காவடி ஆட்டமும், வாணவேடிக்கையும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
    மதுக்கரையில்... கோவையை அடுத்த மதுக்கரை, மரப்பாலத் தோட்டத்தில் உள்ள விநாயகர், முருகன் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விநாயகர், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன.
    விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு காவடி முத்தரிப்பும், மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன. மாலை 6 மணி அளவில் வாணவேடிக்கையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், முருகனை எழுந்தருளச் செய்து, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேருடன் பாதயாத்திரையாக மருதமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மரப்பாலம் நண்பர்கள், பங்குனி உத்திரத் திருவிழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai