Enable Javscript for better performance
அரசுப் பேருந்து நடத்துநரை கத்தியால் குத்திய காவலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து நடத்துநரை கத்தியால் குத்திய காவலர் கைது

    By DIN  |   Published on : 11th April 2017 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் அரசுப் பேருந்து நடத்துநரைக் கத்தியால் குத்திய ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    பழனியில் இருந்து கோவையை அடுத்த ஆனைகட்டிக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்தப் பேருந்தில் தேனி மாவட்டம், உப்பாரபட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30) நடத்துநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த சிவராமச்சந்திரன் (28) கோவைக்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளார்.
    இந்த நிலையில், பேருந்து உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது சிவராமச்சந்திரனை இறங்கும்படி பாண்டியராஜன் கூறியுள்ளார். அதற்கு அவர் காந்திபுரத்தில் இறங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காந்திபுரத்துக்கு சிவராமச்சந்திரன் பயணச்சீட்டு வாங்கியுள்ளார்.
    இதைத் தொடர்ந்து, பேருந்து காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது பழனியிலே காந்திபுரத்துக்கு பயணச்சீட்டு கொடுத்து இருந்தால் இரண்டாவது தடவையாக பயணச்சீட்டு பெற வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று சிவராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    இதில் ஆத்திரமடைந்த சிவராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியராஜனின் தொடையில் குத்தியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டூர் காவல் துறையினர் சிவராமச்சந்திரனைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சிவராமச்சந்திரன் போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai