Enable Javscript for better performance
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி: 6 வேப்ப மரங்களுக்கு மறுவாழ்வு- Dinamani

சுடச்சுட

    

    கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி: 6 வேப்ப மரங்களுக்கு மறுவாழ்வு

    By DIN  |   Published on : 11th April 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி காரணமாக அங்கிருந்து 6 வேப்ப மரங்களை வேருடன் எடுத்து மற்றொரு பகுதியில் நடும் பணியை ஓசை அமைப்பினர் திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர்.
    கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளுக்கு விமான நிலைய நுழைவாயில் அருகே உள்ள சுமார் 20 முதல் 45 ஆண்டுகளான 6 வேப்ப மரங்கள் இடையூறாக இருந்தன.
    இதைத் தொடர்ந்து, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி அந்த மரங்களை வேருடன் எடுத்து 350 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடங்களில் நடுவதற்கு முடிவு செய்தார். இந்தப் பணியை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினர் மேற்கொள்ள முன்வந்தனர்.
    இதையடுத்து, கடந்த இரு நாள்களாக மரங்களை மறு நடவு செய்யும் இடங்களில் குழி எடுப்பது, தென்னை நார்க் கழிவு, மண் புழு உரங்களைக் கொட்டுவது போன்ற பணிகளை அந்த அமைப்பினர் செய்து வந்தனர்.
    இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் விமான நிலையத்தின் முகப்பில் இருந்த 25 ஆண்டு பழைமை வாய்ந்த வேப்ப மரத்தை பொக்லைன், டிப்பர் டிராக்டர் உதவியுடன் வேருடன் பெயர்த்தெடுக்கும் பணியில் விமான நிலைய ஊழியர்கள், ஓசை அமைப்பினர் ஈடுபட்டனர். பின்னர் அந்த மரத்தை காலி இடத்தில் இரவு 8.30 மணி அளவில் மறுநடவு செய்தனர்.
    இதுகுறித்து ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சையது கூறுகையில், 'ஓசை அமைப்பு சார்பில் பல்வேறு பகுதிகளில் மரங்களை எடுத்து மறுநடவு செய்து வருகிறோம். அதே போல், கோவை விமான நிலையத்திலும் அனைத்து தரப்பினரின் உதவியுடன் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். ஆணி வேருடன் பெயர்த்தெடுத்து மறுநடவு செய்யப்படும் இந்த மரங்கள் உயிர்பிக்கும்போது அதன் தன்மை பாதிக்கப்படாது. மரங்களை மறு நடவு செய்வதற்கான செலவுகளை விமான நிலையத்தினரே ஏற்றுக் கொண்டுள்ளனர். கோவையில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இதில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செவ்வாய்க்கிழமை இரு மரங்கள், புதன்கிழமை இரு மரங்கள், வியாழக்கிழமை ஒரு மரம் என மொத்தம் 6 மரங்களையும் மறுநடவு செய்ய உள்ளோம். மறு நடவு செய்வது குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இதில் பங்கேற்கலாம். அவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்க உள்ளோம் என்றார்.
    இந்தப் பணியில் ஓசை அமைப்பின் தலைவர் கே.காளிதாசன், சிறுதுளி அமைப்பின் நிர்வாகி அறங்காவலர் வனிதா மோகன், உயர் மட்டக்குழு உறுப்பினர் சிஜிஎஸ் மணியன், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai