தென்திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு
By DIN | Published on : 11th April 2017 04:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருமலை ஸ்ரீ வாரி வேங்கடசாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த மூன்று நாள் வசந்தோற்சவ நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நிறைவடைந்தன.
விஸ்வரூப தரிசனத்துடன் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய முதல் நாள் நிகழ்ச்சியில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீ நாராயணகிரி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மாலைநேர சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கமான சேவைகளுடன் திருப்பாவாடை சங்கல்பம் நடைபெற்றது.
இந்த நிலையில், இறுதி நாளான திங்கள்கிழமை ஸ்ரீ நாராயணகிரி மண்டபத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் புத்தாண்டு:
நித்யோற்சவத்தின் 17-ஆம் நாள் நிகழ்ச்சியாக வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ஸ்ரீ ஹேவிளம்பி தமிழ் வருடப்பிறப்பையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் வைபவங்கள் தொடங்குகின்றன. தொடர்ந்து அதிகாலை 3.50-க்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு காலை நேர பூஜைகள், 5 மணிக்கு பூராபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரத மாட வீதியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன், ஸ்ரீ மலையப்ப சுவாமியின் திருவீதி உலாவும், அதைத் தொடர்ந்து மாலைநேர பூஜைகளும் நடைபெறுகின்றன என திருக்கோயில் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.