Enable Javscript for better performance
பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் காய்ந்து வரும் தென்னை மரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் காய்ந்து வரும் தென்னை மரங்கள்

    By DIN  |   Published on : 11th April 2017 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சி காரணமாக பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    பொள்ளாச்சியில் சுற்றுப் பகுதியில் 1 லட்சம் ஏக்கரில் தென்னை மரங்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 65 சதவீதம் பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது.
    கடந்த ஆண்டு பருவமழைகள் பொய்த்துபோனதால் தற்போது, பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள தென்னை மரங்களில் 35 சதவீதம் மரங்கள் வறட்சியைத் தாக்கு பிடிக்காமல் காய்ந்துவிட்டது. மீதமுள்ள மரங்கள் உயிருடன் மட்டுமே இருக்கிறது. ஆனால் 40 சதவீதம் வரை காய்ப்புத் திறன் குறைந்துவிட்டது. நீண்ட காலப் பயிரான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    உயிருடன் உள்ள தென்னை மரங்களில் காய்ப்புத் திறன் குறைந்துவிட்டாலும், அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சில விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்கி மரங்களுக்கு ஊற்றி வருகின்றனர்.
    வறட்சியால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    இதுகுறித்து கோவை மாவட்ட தென்னைநார் மற்றும் சார்பு பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கௌதமன் கூறியதாவது:
    வறட்சியால் 35 சதவீதம் வரை தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதனால், தென்னை சார்பு தொழிலான தென்னைநார் உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், தென்னைசார் தொழிலாளர்கள் என பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
    தென்னை நார் மற்றும் காயர் பித் எனப்படும் தென்னைநார் கழிவு கட்டிகள் பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏற்றுமதி 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இந்த ஆண்டு ரூ. 200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai