Enable Javscript for better performance
மதுக்கடைகளை மூடக் கோரி தொடரும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அன்னூர் - சோமனூர் சாலையில், சொக்கம்பாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் மதுக்கடையை காக்காபாளையம் நான்கு சாலை சந்திப்பில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் காக்காபாளையம், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டுக் கடையைத் திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அந்த பகுதியிலேயே உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
    இந்நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், யாரும் வராததால் தொடர்ந்து பெண்கள் கடை முன்பு மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர்.
    மேலும், இதுவரை அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேலும், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் அனைவரையும் அழைத்துக் கூட்டம் நடத்தி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    கீரணத்தம் பகுதியில்...:
    சரவணம்பட்டி - கீரணத்தம் சாலையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீரணத்தம் ஊராட்சி முன்னாள் தலைவர் சுகுமார் தலைமையில், அப்பகுதி பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சூலூர் அருகே...:
    சூலூர் அருகே கலங்கல் பாதையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டாஸ்மாக் மண்டல மேலாளர் வெங்கடாசலம் 25 நாள்களுக்குள் அந்தக் கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுகப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    பொள்ளாச்சி...:
    பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் அந்த திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று கடையை இடம் மாற்றப் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
    இதேபோல, கரியாஞ்செட்டிபாளையம், நாயக்கன்பாளையம், தேவநல்லூர், குஞ்சிபாளையம், வடக்கிபாளையம், சூளேஸ்வரன்பட்டி, பொள்ளாச்சி 36-ஆவது வார்டு, ஊத்துக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியர் காயத்ரியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai