Enable Javscript for better performance
மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 11th April 2017 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக மதுக்கடைகளை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட இக்கடைகள் குடியிருப்புகள் அதிகம் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், கவுண்டம்பாளையம், துடியலூர், மேட்டுப்பாளையம், ரத்தினபுரி, சுல்தான்பேட்டை, காளப்பட்டி, ராமநாதபுரம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். இதில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாயில் கருப்புத் துணி கட்டியபடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
    சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலை முருகன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. இங்கு மது அருந்த வருபவர்கள் கோயில் கிரிவலப் பாதையில் பாட்டில்களை உடைத்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே இந்தக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என கொமதேக சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர் பி.முத்துகிருஷ்ணன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
    நிவாரணத் தொகை வழங்க வேண்டும்:
    சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரையில் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இப்பகுதிகளில் உரிய ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.முத்துகிருஷ்ணன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
    களிமண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்:
    தமிழகம் முழுவதும் 4 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மழைக் காலங்களில் வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் இருந்து தேவையான அளவு களிமண் எடுக்க சிறப்புச் சலுகைகள் அறிவிக்க வேண்டும். மண்பாண்ட பொருள்கள் தயாரிக்க கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுவாமி வேடமணிந்து பிச்சை எடுக்க அனுமதிக்கக் கூடாது:
    இந்து மதக் கடவுள்களின் வேடமணிந்து சிலர் வீடுவீடாய் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றனர். அவ்வாறு பிச்சை எடுப்பவர்களில் பாதிப் பேர் பிற மதத்தவர்கள் எனத் தெரிகிறது. எனவே, கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி சக்திசேனா சார்பில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
    26 பேர் கைது:
    கோவை கணபதி சங்கனூர் சாலையில் உள்ள மதுக்கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் பாரத் சேனா அமைப்பினர் மாநகர இளைஞரணி செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கணபதி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai