Enable Javscript for better performance
சசிகுமார் கொலை வழக்கு: தலைமறைவானவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் பரிசு: சிபிசிஐடி அறி- Dinamani

சுடச்சுட

    

    சசிகுமார் கொலை வழக்கு: தலைமறைவானவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் பரிசு: சிபிசிஐடி அறிவிப்பு

    By DIN  |   Published on : 12th April 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசளிக்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது.
     இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துடியலூர் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக துடியலூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
     இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கே.கே.நகரைச் சேர்ந்த சையது அபுதாஹீர் என்பவரை சிபிசிஐடி போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
     இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் சாய்பாபா காலனி, கருணாநிதி நகரைச் சேர்ந்த பர்கத்துல்லா மகன் சதாம், அங்கண்ணன் தெருவைச் சேர்ந்த அப்துல் ராஜா மகன் முபாரக் ஆகிய இருவரைப் பற்றியும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சிபிசிஐடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
     மேற்கண்ட இருவர் மீதும் சந்தேகம் இருப்பதால் அவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவர்களது வீடுகளில் அழைப்பாணை வழங்கப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து டிசம்பர் 28-ஆம் தேதி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ள போலீஸார், அவர்கள் இதுவரையிலும் ஆஜராகாததால் அவர்களைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
     மேற்கண்ட இருவரைப் பற்றியும் தகவல் தெரிந்தவர்கள் கோவை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. எஸ்.ஆனந்தகுமாருக்கோ (தொடர்பு எண் 94981 04409), ஆய்வாளர் ஆனந்த் ஆரோக்கிய ராஜூக்கோ (94981 74230), சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கோ (0422- 2241752), சென்னையில் உள்ள சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறைக்கோ (044-28512510) தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும் சிபிசிஐடி போலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai