Enable Javscript for better performance
தொண்டாமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 75% நிறைவு: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தொண்டாமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 75% நிறைவு: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 12th April 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொண்டாமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
    காரமடை ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சியில் ரூ. 130 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் தொண்டாமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் கூறியதாவது:
    பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலாந்துறை, பேரூர் பேரூராட்சிகள், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 134 வழியோர கிராம குடியிருப்புகளுக்காக ரூ. 130 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
     மேலும், 7 பேரூராட்சிகளின் உச்சகட்ட மக்கள் தொகையாக (2044) 96 ஆயிரம் என கணக்கிட்டு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர் விகிதாசாரத்திலும், 134 வழியோர கிராம குடியிருப்புகளுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் மொத்தம் நாளொன்றுக்கு இடைக்கால தேவையான ஒரு கோடியே 11 லட்சம் லிட்டர் எனவும், உச்சகட்ட தேவையான ஒரு கோடியே 30 லட்சம் லிட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.
    இத்திட்டத்துக்காக பத்திரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் பவானி ஆற்றில்  இருந்து குருந்தமலை கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.மேலும், அங்கிருந்து குழாய்கள் மூலம் வழியோரத்தில் உள்ள வேடப்பட்டி, தாளியூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர், தென்கரை, ஆலாந்துறை, பூலுவப்பட்டி  ஆகிய பேரூராட்சிகள், 134 கிராம குடியிருப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் தனித் தனியாக அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து பேரூராட்சிகளில் தனித் தனியாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
    இத்திட்டக் குடிநீர் 39 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் 75 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பாஸ்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai