மதுக்கடைகள் வேண்டாம்: பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published on : 12th April 2017 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுக்கடைகளை மூடக்கோரி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
சரவணம்பட்டி-சத்தி நெடுஞ்சாலை பகுதியில் இயங்கி வந்த மதுக்கடையை சரவணம்பட்டி-கீரணத்தம் சாலையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் அந்த மதுக்கடையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்த காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர்.
அத்தப்பகவுண்டன்புதூரில்...: சூலூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடையில் அதிகாலை 5 மணி முதலே மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபானக் கூடப் பணியாளரைக் கைது செய்தனர். மேலும் 54 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுக்கரையில்...: சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் காமராஜர் நகரில் செயல்பட்டு வரும் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போத்தனூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பெட்டதாபுரத்தில்...: காரமடை அருகே பெட்டதாபுரத்தில் புதிதாக மதுக்கடை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் விஜயன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில்...: மேட்டுப்பாளையத்தை அடுத்த குறும்பனூர், புதுக்காடு பிரிவு அருகே புதிதாக மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனூர்-குருந்தமலை சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.