Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் செயற்கை குட்டைகளுக்குப் படையெடுக்கும் வன விலங்குகள்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் செயற்கை குட்டைகளுக்குப் படையெடுக்கும் வன விலங்குகள்

    By DIN  |   Published on : 12th April 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச் சரகத்தில் உள்ள யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள், வனப் பகுதியில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில் கூட்டம் கூட்டமாக வந்து தாகத்தைத் தீர்த்துச் செல்கின்றன.
    மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவை வனக் கோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச் சரகப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வறட்சி தற்போது நிலவி வருகிறது. வனத்தில் உள்ள மரம்,செடி, கொடிகள் காய்ந்து வருவதுடன், வன விலங்குகளின் குடிநீர் ஆதாரமான வனக்குட்டை கள், நீரோடைகள் என அனைத்தும் வறண்டு போய் விட்டன.
    இதனால் உணவு, குடிநீர் தேடி வனத்தை விட்டு வெளியே வரும் வன விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விடுவதால் மனித - விலங்கு மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக வனத் துறை சார்பில் வன எல்லையோரங்களில் ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகள், செயற்கைக் குட்டைகளை அமைத்து, அதில் தினமும் நீர்விட்டுப் பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் வனச் சரகத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட யானைகள் உலவி வருகின்றன. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் தண்ணீர் உட்கொள்ளும் யானைகளுக்கு அந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லை.
    இயல்பாகவே யானைகள் தண்ணீரை அருந்துவதுடன், நீரில் இறங்கி ஆனந்தமாக குளித்து தங்கள் உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் தன்மையுடையவை. ஆனால், வனத்தில் உள்ள இயற்கையான குட்டைகள் வறண்டு விட்டதால், வெப்பத்தைத் தாங்க முடியாத யானைகள் இரவில் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது எதிர்பாராமல் சில யானைகள் தண்ணீர்த் தொட்டி, கிணறுகளில் விழுந்து விடும் சம்பவங்களும் நடைபெற்று விடுகின்றன. இந்த அசம்பாவிதங்களைத் தடுக்க, வனத் துறையினர் வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டிகள், செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பும் பணியையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
    இதற்கென வனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அவற்றிலிருந்து மோட்டார் மூலமாகத் தண்ணீரை எடுத்து, லாரிகள் மூலம் கொண்டு வந்து வனக் குட்டைகளில் நிரப்பி வருவதுடன், அவற்றில் போதிய நீர் இருக்குமாறு கூடுதலாக நியமிக்கப்பட்ட வனப் பணியாளர்களைக் கொண்டும் கண்காணித்து வருகின்றனர். இதனால் மழை பொய்த்துப் போனாலும், நீர் நிரப்பப்பட்ட இந்த செயற்கைக் குட்டைகளை நோக்கி யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து வந்து தண்ணீர் அருந்துவதுடன், கடும் வெயிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நீரில் குளித்து மகிழ்கின்றன. இதுகுறித்து, வனத் துறையினர் கூறும்போது, "வன விலங்குகள் தங்கள் தாகத்தை தீர்த் து, நீரில் குளித்து விளையாடும் வகையில் வனப் பகுதி செயற்கைக் குட்டைகளில் நீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை முடியும்வரை இப்பணிகள் தொடர்ந்து நீடிக்கும்' என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai