சிபிசிஐடி காவலர்போல் நடித்து பணம் பறித்த இளைஞர் கைது
By DIN | Published on : 13th April 2017 07:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி காவலர் எனக்கூறி பயணியிடம் பணம் பறித்த இளைஞரை ரயில்வே காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் கூறியதாவது:
கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ராஜன் (40). இவர் மோட்டார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக பாலக்காட்டில் இருந்து பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை கோவை வந்துள்ளார். ரயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், ராஜனை வழிமறித்த இளைஞர் ஒருவர், தான் சிபிசிஐடி காவலர் என்று கூறியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டு உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து கோவை ரயில்வே காவல் நிலையத்தில் ராஜன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய கோவை ரயில்வே காவல் துறையினர், ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ஜி.சுனில் சாஹு (37) என்பவரை புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை ஜெ.எம். 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கேரளம், ஆந்திர மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் காவலர்போல் நடித்து பயணிகளிடம் பணம் பறித்தது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.