Enable Javscript for better performance
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம்: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம்: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்

    By DIN  |   Published on : 13th April 2017 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
    இந்த சங்கத்தின் சார்பில், தில்லியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் பகுதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    மாநிலத் தலைவர் வழுக்குப்பாறை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பொதுச் செயலர் பி.கந்தசாமி, செயலர் எம்.செந்தில்குமார், பொருளாளர் ஏ.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
    இந்தப் போராட்டத்தில் கோவை மாவட்டம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
    போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலர் கந்தசாமி பேசும்போது, காவிரியில் தமிழகம் உரிய பங்கீடைப் பெற, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த உத்தரவை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக சுமார் ரூ. 36 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
    தமிழகத்திலும் அதேபோன்று வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆனால், கடன் தள்ளுபடி விஷயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 17 சதவீத கடன் தொகையை, பெரும்பாலும் இடைத்தரகர்களுக்கும், கந்து வட்டிக்காரர்களுக்குமே பொய்யான ஆவணங்கள் மூலம் வழங்குகின்றனர். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு, "மாற்றத்தை நோக்கி' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
    அதேபோல், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் துரை.குமாரவேலு, காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஊழல் எதிர்ப்பு இயக்கச் செயலர் என்.கே.வேலு, பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai