Enable Javscript for better performance
தமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்பு க- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்பு கோரிக்கை

    By DIN  |   Published on : 14th April 2017 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    இது தொடர்பாக தொழில் கூட்டமைப்பின் தமிழக குழுவைச் சேர்ந்த பி.ரவிச்சந்திரன், எம்.பொன்னுசாமி,எஸ்.நாராயணன், ரவி சாம் ஆகியோர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவையும், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
    தமிழகம் பல்வேறு துறைகளில் குறிப்பாக பொறியியல் உற்பத்தி, வாகனத் தயாரிப்பு, மருந்து, ஆயத்த ஆடை, தோல், வேதியியல் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதேபோல், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற தமிழக நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
    இந்த நிலையில், வர்த்தகம் மேலும் வளர்ச்சி அடையவும், ஏற்றுமதி உயரவும் விமானப் போக்குவரத்து வசதி அவசியமானதாக உள்ளது. திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களுக்கு கோவை நுழைவு வாயிலாக உள்ளது. எனவே, இங்கு பயணிகள், சரக்கு விமானங்களின் சேவை கூடுதலாக தேவைப்படுகிறது.
    கோவை விமான நிலையத்தை கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 லட்சம் உள்ளூர் பயணிகளும், 1.30 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், சுமார் ரூ.1.25 லட்சம் கோடிக்கு சரக்குப் போக்குவரத்து நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.
    இந்த நிலையில், கோவை விமான நிலையத்தை கூடுதலாக சர்வதேச விமானங்கள், உள்ளூர் விமானங்கள், சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். அதேபோல், சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் ஓடுபாதைகள் அமைக்க வேண்டும்.
    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுடன், அண்டை மாநிலங்களில் குறிப்பாக மைசூரு, ஹூப்ளி, புதுவை போன்ற பகுதிகளில் உள்ள விமான நிலையங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai