Enable Javscript for better performance
விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    ஒப்பந்தக் கூலியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சோமனூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    போராட்டத்துக்கு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர்.
    போராட்டம் குறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:
    விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் உள்ளது.
    2014- ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜவுளி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்தே வழங்கி வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் சோமனூர், காரணம்பேட்டை, கணியூர் உள்ளிட்ட 10 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது என்றனர்.
    இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை முடித்துவைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai