Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு (ஹேவிளம்பி) பிறப்பையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை விஷுவையொட்டி, கோவையில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    காட்டூர் அருள்மிகு அம்பிகை முத்து மாரியம்மனுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒலம்பஸ் பாரதி நகர் முத்தியம்மன் கோயிலில் சித்திரைத் திருநாளையொட்டி பாளையத்து அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    கோவை, பெரிய கடை வீதி மாகாளியம்மனுக்கு லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், கோனியம்மன், சங்கமேஸ்வரர், தண்டு மாரியம்மன், பேரூர் பட்டீசுவரர் கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தாண்டு வழிபாடு நடத்தினர்.
    அதேபோல், கேரள மாநிலத்தவர் அதிகம் வாழும் கோவையில் சித்திரை விஷுவையொட்டி கணி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சித்தாபுதூர் ஐயப்பன் கோயில், சங்கனூர் ஐயப்பன் கோயில்களில் நடைபெற்ற கனி காணும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விஷுவையொட்டி குழந்தைகளுக்கு அன்ன பாயாசம் ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    புத்தாண்டையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் வ.உ.சி. பூங்கா, கோவைக் குற்றாலம் உள்ளிட்ட இடங்களிலும் திரையரங்குகள், வணிக வளாகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai