Enable Javscript for better performance
புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு கோரிக்கை

    By DIN  |   Published on : 15th April 2017 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் நலிவடைந்து வரும் ஜவுளித் துறையை மேம்படுத்த, மாநில அரசு புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அமைப்பின் செயலர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் ஜவுளி உற்பத்தித் துறையின் பங்களிப்பு முக்கியமானது. இந்தத் துறையை அடிப்படையாக வைத்தே பல்வேறு தொழில்களின் வளர்ச்சி உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஜவுளி உற்பத்தித் துறை கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக நூற்பாலைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
    பருத்தி அதிகம் விளையும் மாநிலங்களான குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா போன்றவற்றில், மிகப்பெரிய சலுகைகளுடன் ஜவுளிக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, அங்கு தொழில் தொடங்கும் ஆலைகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு மாநில அரசு 7 சதவீதமும், மத்திய அரசு 2 முதல் 4 சதவீதமும் வட்டி தள்ளுபடி வழங்குகிறது.
    மேலும், நூற்பாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை மின் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. விற்பனை வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள ஜவுளித் தொழில் துறையினர் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளனர்.
    தமிழக ஜவுளித் தொழில் துறையினர் அதிக உற்பத்தித் திறனை எட்டினாலும், இந்த மாநில நூற்பாலைகளுடனும், ஜவுளி நிறுவனங்களுடனும் போட்டி போட முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழகத்திலும் அதைப்போன்று தொழில் துறையும், மாநில அரசும் கைகோத்து செயல்பட்டால் மட்டுமே சிக்கலில் உள்ள ஜவுளித் துறையை காப்பாற்ற முடியும். எனவே, தமிழக அரசு புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும். அது, அடுத்த 3 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்துடன் இருக்க வேண்டும்.
    அந்த செயல்திட்டத்தில், ஏற்கெனவே இருக்கும் ஆலைகளில் வழங்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள், மின்சேமிப்பு, உற்பத்தித் திறன் அதிகரிக்க உதவும் திட்டங்கள், பருத்தி விளைச்சலை அதிகரிக்கத் தேவையான திட்டங்கள் இடம் பெற வேண்டும்.
    மேலும், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி தொடர்பான திட்டங்கள், ஏற்றுமதி மையங்களான திருப்பூர், கரூர், ஈரோடு ஆகியவற்றை ஆண்டு வளர்ச்சி 20 சதவீதத்தை எட்ட வைப்பது, செயற்கை பஞ்சு கலந்த ஆடைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், இ-காமர்ஸ் வணிகத்தை இந்தத் துறையில் வளர்ப்பது போன்ற அம்சங்களும் இடம் பெற வேண்டும்.
    புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்குவதற்காக தமிழக அரசு உடனடியாக சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர், அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai