Enable Javscript for better performance
2-ஆவது திருமணம் செய்த பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    முதல் திருமணம் செய்ததை மறைத்து 2-ஆவது திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாராபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹெலன்ஜோசப் (எ) துரைராஜ். இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாடியைச் சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரின் மகள் சகாய ஜாக்குலினுக்கும் கன்னியாகுமரி மாவட்டம், துவாரங்காட்டில் 2003-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு சகாய ஜாக்குலின் தன் கணவருடன் குடும்பம் நடத்த வராததுடன், 2015-இல் வரதட்சிணை கேட்டுத் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக தன் கணவர் துரைராஜ், மாமியார் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையை துரைராஜ் பெற்ற சமயத்தில், சகாய ஜாக்குலினுக்கும், ரெச்சகுளம் நேசையன் என்பவருக்கும் 1998-இல் திருமணம் நடந்தது தெரியவந்தது. முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக
    சகாய ஜாக்குலின் மீதும், மாமனார் வேதமாணிக்கம், மாமியார் மேரி, மைத்துனர் பிராங்கிளின், வேதமாணிக்கத்தின் தம்பி பிரான்சிஸ் ஆகியோர் மீதும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துரைராஜ் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    இவ்வழக்கு விசாரணை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த சகாய ஜாக்குலினுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குற்றவியல்
    நீதித் துறை நடுவர் சசிகுமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் இருந்து மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai