Enable Javscript for better performance
சூலூரில் பொதுப் பாதையை அடைத்து மதுக் கடை: பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சூலூரில் பொதுப் பாதையை அடைத்து மதுக் கடை: பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 17th April 2017 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே பொதுப் பாதையை அடைத்து மதுக் கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
    சூலூர் அருகே திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே மதுக் கடை செயல்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அந்தக் கடை அகற்றப்பட்டது.
    இந்நிலையில், அந்த மதுக் கடையை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு உள்ளாக அந்த இடம் இருப்பதால், அதற்கு மாற்றாக அங்குள்ள பொதுவழியை அடைத்து அதன் மூலம் 500 மீட்டர் தூரம் உள்ளதென காட்ட முயற்சிக்கப்பட்டது. இதையறிந்த அமர்ஜோதி நகர், விமான நகர், சப்தகிரி நகர், ஜெயின் நகர் பகுதி மக்கள் பொதுப் பாதையை அடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், அந்த இடம் தனியாருக்குச் சொந்தமான இடம் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் பொதுப் பாதையை அடைத்து வைத்திருந்த தட்டிகளை அகற்றினர்.
    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது:
    நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான், மதுக் கடை இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நீதிமன்றத்தை ஏமாற்றும் விதமாக பொது வழியை அடைத்து, அதன் மூலம் 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுக் கடை அமைக்கப்பட்டுள்ளது எனக் காட்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதையும் மீறி, டாஸ்மாக் நிர்வாகம் இங்கு மதுக் கடையை அமைத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதோடு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
    பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் குஞ்சிபாளையம் பிரிவில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
    குஞ்சிபாளையம் பிரிவில் மதுக் கடை அமைக்கப்பட உள்ளதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி-மீன்கரை சாலையில், குஞ்சிபாளையம் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீஸார், டாஸ்மாக் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அப்பகுதியில் மதுக் கடை அமைக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai