Enable Javscript for better performance
பொள்ளாச்சி-உடுமலை சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி-உடுமலை சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 17th April 2017 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேர் நிலையம் முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை ரூ. 24.77 கோடி மதிப்பில் 4.50 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
    பொள்ளாச்சி-உடுமலை சாலையில் தேர் நிலையத்தில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி வரை அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்தச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    இதையடுத்து, இந்தச் சாலையை ரூ. 24.77 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. 4.50 கி.மீ. தூரம் கொண்ட 10 மீட்டர் சாலையை 32 மீட்டர் கொண்ட நான்கு வழிச் சாலையாக மாற்றுவதுடன், நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.
    சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் இதற்கான பணியைத் தொடங்கி வைத்தனர்.
    இதுகுறித்து பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது:
    பொள்ளாச்சி-உடுமலை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்தை தவிர்க்கவும் இச்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. இந்தச் சாலை திண்டுக்கல் வரை நான்கு வழிச் சாலையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சாலை நடைபாதையுடன் அமைப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் செல்வர். பொள்ளாச்சி நகரப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ. 34 கோடியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் என்றார்.
    மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் கூறியதாவது:
    பொள்ளாச்சி தேர் நிலையம் முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ. 24.77 கோடி, பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச் சாலைக்கு ரூ. 500 கோடி, ஈச்சனாரி-குறிச்சி சாலைக்கு ரூ. 10 கோடி, பொள்ளாச்சி புறவழிச் சாலைக்கு ரூ. 2 கோடி, கோவை-சிறுவாணி சாலை விரிவாக்கத்துக்கு ரூ. 18 கோடி, க.க.சாவடி முதல் வேலந்தாவளம் சாலைப் பணிக்கு ரூ. 17 கோடி, கோவில்பாளையம்-நெகமம் சாலைக்கு ரூ. 9 கோடி, கருமாபுரம் பாலத்துக்கு ரூ. 2.5 கோடி, ஆச்சிபட்டி முதல் சிடிசி மேடு வரை சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ. 6 கோடி, 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ. 23 கோடி, நல்லூர் முதல் சக்திமில் வரை புறவழிச் சாலைக்கு ரூ. 10 கோடி, எட்டிமடை பகுதியில் சாலைப் பணிக்கு ரூ. 5 கோடி, உடுமலையில் தாற்காலிக புறவழிச் சாலைக்கு ரூ.1.5 கோடி என பல சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கும், பாலம் அமைக்கும் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகள் முடிவடைந்துள்ளன. பல பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
    வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, சட்டப் பேரவை  முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, நகர் மன்ற  முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், சார்-ஆட்சியர் காயத்ரி, என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai